கல்லூரி மாணவி கற்பழிப்பு: சிங்கப்பூரில் இந்தியருக்கு 16 ஆண்டு ஜெயில்
- மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
- சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
சிங்கப்பூர்:
இந்தியாவை சேர்ந்த சின்னையா (வயது 26) என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த வழக்கில் சின்னையா கைது செய்யப்பட்டார்.
அந்த மாணவி, சம்பவத்தன்று இரவு பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்ற போது, அவரை சின்னையா வனப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மாணவியை அவர் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சின்னையாவின் மனநிலையை பற்றி பல மனநல மதிப்பீடுகள் தேவைப்பட்டதால் இவ்வழக்கு விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று கோர்ட்டு தெரிவித்தது.