உலகம்

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய 4 பேர் கும்பல்

Published On 2024-02-07 06:40 GMT   |   Update On 2024-02-07 11:44 GMT
  • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

சிகாகோ:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

Tags:    

Similar News