உலகம்

சிரியா விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்- 3 பேர் பலி

Published On 2023-03-08 04:33 GMT   |   Update On 2023-03-08 04:33 GMT
  • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் அலெப்போ விமான நிலையம் முக்கிய வழித்தடமாக உள்ளது.
  • இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் காரணமாக அலெப்போ விமான நிலையத்தில், நிவாரண பொருட்களை ஏற்றி வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

டமாஸ்கஸ்:

இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள், சிரியாவில் அலெப்போ விமான நிலையத்தில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் விமான நிலையத்தின் சில பகுதிகள் கடும் சேதமடைந்தன.

இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதாக போர் கண்காணிப்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் கடந்த மாதம் 6-ந் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் அலெப்போ விமான நிலையம் முக்கிய வழித்தடமாக உள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் காரணமாக அலெப்போ விமான நிலையத்தில், நிவாரண பொருட்களை ஏற்றி வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, அலெப்போ சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து லதாகியாவின் மேற்கு மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன. அங்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களுடன் கடந்த மாதத்தில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் அலெப்போவில் தரையிறங்கின. தற்போதைய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யும் வரை அலெப்போ விமான நிலையத்தில் நிவாரண விமானங்கள் தரையிறங்குவது சாத்தியமில்லை என்றும் உதவி பொருட்களுடன் வரும் விமானங்கள் டமாஸ்கஸ் மற்றும் லதாகியா விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News