ராணுவ பயிற்சி தீவிரம்: சீனா-தைவான் இடையே போர் பதற்றம்
- சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது.
- தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது.
தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது.
மேலும், தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தீவிரமாக நடத்தியது. சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றதால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை நிச்சயம் கொடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது. இதற்கிடையே தைவானின் கின்மென் தீவுகளில் சீன டிரோன்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தைவான் ராணுவத்தின் கின்மென் பாதுகாப்பு கமாண்டர் சாங் சுங் கூறும்போது, 'சீன டிரோன்கள் (ஆளில்லா விமானம்) நேற்று இரவு கின்மென் பகுதிக்குள் பறந்தன.
அவைகளை விரட்ட உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தோம். நெருப்புகளை வீசி எச்சரிக்கை விடுத்தோம். இதையடுத்து டிரோன்கள் திரும்பி சென்றன. தைவானின் வெளியுறவுத் தீவுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறித்த உளவுத் தகவல்களை சேகரிக்க டிரோன்கள் பயன்படுத்தப் படுகின்றன' என்றார்.
இந்தநிலையில் இன்று தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்பு இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது.
இன்றுமுதல் வருகிற 7-ந்தேதி வரை சீன ராணுவத்தின் முக்கியமான ராணுவ பயிற்சி நடைபெறும் என்று தைவானின் வரை படத்தில் போர் பயிற்சி நடைபெறும் இடங்களை சுட்டிக்காட்டி அப்புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தைவான் ராணுவம் தரப்பில் கூறும்போது, 'தைவானை சுற்றியுள்ள நீரில் முன்னோடியில்லாத வகையில் நடைபெறும் சீனாவின் பயிற்சிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மோதலுக்கு தயாராக இருந்தாலும் அதை நாங்கள் விரும்பவில்லை என்றது.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, 'போரை எதிர்நோக்காமல் இருக்கும்போது மோதலுக்கு தயாராகும் கொள்கையை எடுக்க சீனா நிலைநிறுத்த முயற்சிக்கிறது. மோதலை அதிகரிக்காமல், சச்சரவுகளை ஏற்படுத்தாத மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்றது.
சீனா தனது ராணுவத்தின் போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் தைவான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் தென்சீன கடல் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.
போர் பயிற்சி நடக்கும் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் குறிப்பிட்ட கடல்பகுதிகள், வான் வெளிக்குள் நுழையக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
இந்தநிலையில் தைவானை சுற்றி போர் பயிற்சி நடத்துவதற்கு சீனாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும்போது, 'சீனா செய்வது (போர் பயிற்சி) பொறுப்பற்றது என்று நாங்கள் நம்பு கிறோம்.
ஏவுகணை சோதனை, துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானங்கள் பறந்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கும்போது சில வகை யான சம்பவங்கள் (தாக்கு தல்) நிகழும் சாத்தியம் உள்ளது' என்றார்.
இதேபோல் சீனாவுக்கு ஜி-7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி ஜோசப் பொமுரல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.