உலகம்

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணம்: கோத்தபய ராஜபக்சேவிடம் 3 மணி நேரம் விசாரணை

Published On 2023-02-07 05:44 GMT   |   Update On 2023-02-07 06:58 GMT
  • இலங்கையில் போராட்டங்கள் கட்டுக்குள் வந்ததையடுத்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.
  • ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என்று பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே, மற்ற பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினரும் விலகினர். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்ததால் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி மாளிகைக்குள் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ஏராளமான பணங்களை எடுத்தனர். அதை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கையில் போராட்டங்கள் கட்டுக்குள் வந்ததையடுத்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோர்ட்டு உத்தரவின்படி குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள், கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஜனாதிபதி மாளிகையில் பணம் இருந்தது தொடர்பாக சுமார் 3 மணி நேரம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே, அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்று கூறி அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News