உலகம்

ஆஸ்திரிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2024-07-10 01:14 GMT   |   Update On 2024-07-10 01:14 GMT
  • இரு நாட்டு தலைவர்களும் நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
  • கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வியன்னா:

2 நாள் ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

அதேவேளை, இந்திய பிரதமர் மோடி ஆஸ்திரியா வந்தது மகிழ்ச்சியளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்ல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடியை வியன்னாவுக்கு வரவேற்கிறேன். உங்களை ஆஸ்திரியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்திரியாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள். உங்கள் இந்த வருகையின்போது அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து ஆலோசிக்க ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும், ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளைய விவாதத்தை எதிர்பார்க்கிறேன். உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும் என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News