உலகம்

சுதந்திர தினத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல்- உக்ரைன் ரெயில் நிலையத்தில் 22 பேர் பலி

Published On 2022-08-25 06:09 GMT   |   Update On 2022-08-25 06:09 GMT
  • ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது.
  • சுதந்திர தினத்தை யொட்டி அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களை தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை.

இந்தநிலையில் நேற்று உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஆனால் தற்போது சண்டை நடந்து வருவதால் பொது இடங்களில் சுதந்திரதின விழா எதுவும் கொண்டாடப்படவில்லை. தலைநகரில் பொதுமக்கள் ஒன்றாக கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த தினத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரபடுத்தும் என்றும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அவர் சொன்னது போல் ரஷியா நேற்று இரவு உக்ரைன் மீது தனது தாக்குதலை நடத்தியது.

மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரெயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கிடுனஸ்கிகோலே மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 வயது குழந்தை உள்பட சிலர் இறந்தனர். இதேபோல் மேலும் சில இடங்களிலும் ரஷியா தாக்குதலை நடத்தியது.

சுதந்திர தினத்தை யொட்டி அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் ( ரஷியா) எந்த ராணுவத்தை வைத்து இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் நிலத்தை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம்.

பயங்கரவாதிகளுடன் புரிந்துணர்வு செய்ய உக்ரைன் முயற்சிக்கவில்லை. உக்ரைன் இறுதி வரை போராடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News