உலகம்

உக்ரைனில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- 10 பேர் பலி

Published On 2022-07-01 05:42 GMT   |   Update On 2022-07-01 05:42 GMT

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தாக்குதலை தொடங்கியது. 5 மாதங்களுக்கு மேல் இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.

இந்த போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகிவிட்டனர். பல நகரங்கள் ரஷியாவின் மும்முனை தாக்குதலால் சீர்குலைந்து போய் உள்ளது.

உயிருக்கு பயந்து பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்து ஓடி விட்டனர்.

ரஷியபடைகள் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டன. லிவிசான்ஸ்சா நகரத்தை பிடிக்க தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிவிட்டன.

இந்த தீவில் இருக்கும் ரஷியபடைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் ஏற்றி சென்ற படகுகள் மீது உக்ரைன் படையினர் ஆளில்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

உக்ரைன் வீரர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதனால் ஸ்னேக் தீவை உக்ரைன் தன் வசப்படுத்தி உள்ளது.

ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர்.

இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை.

இந்த தாக்குதலில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News