உலகம்

இலங்கை பாராளுமன்ற தேர்தல்- அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி

Published On 2024-11-15 05:48 GMT   |   Update On 2024-11-15 05:48 GMT
  • யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.
  • யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ( என்.பி.பி,) கட்சி முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது.

எதிர்கட்சிகளை விட அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது. நேரம் ஆக ஆக அக்கட்சி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் இருந்தது. ஓட்டுகள் பாதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 63 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகளும், முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளும் பெற்று மிகவும் பின் தங்கி இருந்தது.

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா வெறும் 2.98 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி பரிதாப நிலையில் இருந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் 123 இடங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.

பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

ஈழத்தமிழர்களின் தலைநகராக போற்றப்படும் திரிகோணமலை, மூதூர், சேருவில் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் இலங்கை தமிழரசு கட்சி தோல்வியை சந்தித்தது.

திரிகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர், மானிப்பாய், கோபாய் தொகுதிகளிலும் ஆளும் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.

யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

ராஜபக்சே குடும்பத்தினரின் கோட்டையாக கருதப்படும் அம்பாந்தோட்டை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி கடுமையான தோல்வியை தழுவியது.

இந்த தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இக்கட்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 3 உறுப்பினர்களை மட்டுமே பெற்றது.

ஆனால் இந்த தேர்தலில் இலங்கை பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளதால் அக்கட்சி மிக எளிதாக பாராளுமன்றத்தை கைப்பற்றி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் தேசிய மக்கள் சக்தி விசுவரூப வெற்றி பெற்று இருக்கிறது.

இலங்கை பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற முடியும். தற்போது தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News