உலகம்

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஆணையம்

Published On 2024-11-15 04:47 GMT   |   Update On 2024-11-15 04:47 GMT
  • புகார்கள் குறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.
  • இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பெர்க் நிர்வகித்து வருகிறார். இதனிடையே மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சேவையை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால், தவறான நடைமுறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனை தொடர்ந்த இந்த புகார்கள் குறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையின் இறுதியில், மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.100 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. 'இந்த புகாரின் படி பார்க்கையில் எந்த ஒரு வாடிக்கையாளர்களும் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை' என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News