நள்ளிரவில் சைரன்: சிதறி ஓடும் மக்கள்- இஸ்ரேலில் மீண்டும் ராக்கெட் தாக்குதல்?
- போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
- வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர். வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுவதால் இஸ்ரேல்- லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.