உலகம்

அமெரிக்காவில் 10 மாகாணங்களை தாக்கிய சூறாவளி புயல், கனமழை- ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து

Published On 2023-08-08 05:15 GMT   |   Update On 2023-08-08 05:15 GMT
  • தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
  • தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

வாஷிங்டன்:

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

புயல் தொடர்பாக தேசிய வானிலை மையம் கூறும்போது, சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

வாஷிங்டன்-பால்டி மோர் பிராந்தியம், புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.

2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News