உலகம்

டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் கைது அரசியல் ரீதியானது அல்ல - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் விளக்கம்

Published On 2024-08-27 04:10 GMT   |   Update On 2024-08-27 04:11 GMT
  • அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம்
  • நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும்.

உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தியும், பாவெல் துரோவின் கைதை கண்டித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 

பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவையும் சிலரால் தவறாக பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆனால் அதற்காக மார்க் ஸுகேர்பேர்கையோ எலான் மஸ்க்கையோ யாரும் கைது செய்யப் போவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ரஷியர் என்ற காரணத்தால் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.

 

இந்நிலையில் பாவெல் துரோவின் கைது அரசியல் ரீதியிலானது அல்ல என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பாவெல் துரோவின் கைது குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் பரவுவதை நான் கவனித்தேன், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நீதித்துறையின் கையில் தற்போது உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தான் முடிவெடுக்க முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News