உலகம்

பற்றி எரிந்த அணுமின் நிலையம்.. ரஷியாவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள் - தீவிரமாகும் போர்

Published On 2024-08-13 01:48 GMT   |   Update On 2024-08-13 04:06 GMT
  • உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.

 

ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்து உக்ரைன் முதலில் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதற்கிடையில் உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன்தான் ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. 

Tags:    

Similar News