'இருப்பது ஒரே ஒரு இந்தியா தான்'.. சீன ஆக்கிரமிப்பு- காலிஸ்தான் சர்ச்சைகளுக்கு மத்தியில் கனடா உறுதி
- அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம்
- நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என ட்ரூடோ குற்றம்சாட்டினார்
இந்தியாவுக்கு எப்போதும் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா தலைநகர் ஒடாவா [Ottawa] நகரில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசான், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குக் கனடா முற்றுமுதலான ஆதரவை அளிக்கிறது. இருப்பது ஒரே ஒரு இந்தியாதான், இதை தெளிவுபடுத்தியாக வேண்டும்.
இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். சர்வதேச விவகாரங்களில் இந்தியா முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு சர்ச்சை, காஷ்மீரில் நடந்துவரும் பயங்கரவாத சம்பவங்கள், சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கனடா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கானடா- இந்தியா இடையே உரசல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.