பிரதமர் மோடி அமெரிக்க பயணம் - வெள்ளை மாளிகை வளாகத்தில் பறக்கும் இந்திய கொடி
- பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல் 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும் அவர் மனைவியுமான ஜில் பைடன் முன்னிலையில் வழங்கப்படும் வரவேற்பை ஏற்கிறார்.
மேலும், அமெரிக்க பாராளுமன்ற இரு சபைகளின் (பிரதிநிதிகளின் சபை மற்றும் செனட் சபை) கூட்டு அமர்வில் உரை நிகழ்த்தவும் உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்புக்கான மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க கொடியுடன், இந்திய கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.