இஸ்ரேல், ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது: எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
- இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
- அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.
இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், அதுவும் குறிப்பாக தற்போதுள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தார்.