உலகம் (World)

துருக்கி-லெபனானில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு

Published On 2023-02-06 05:07 GMT   |   Update On 2023-02-06 05:15 GMT
  • காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

காசியன்டெப்:

துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது. மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது.

காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இது பதிவானது.

இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. இதனால் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்குமாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது.

இதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசியன்டெப் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.

துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த துருக்கியில் நிகழ்ந்த நில நடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நில நடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

துருக்கியை தொடர்ந்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தது. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 53 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதும், இடிந்து கிடக்கும் கட்டிடங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News