உலகம்

இத்தாலியில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 17 பேர் படுகாயம்

Published On 2023-12-12 03:37 GMT   |   Update On 2023-12-12 03:37 GMT
  • ரெயிலுக்குள் இருந்தவர்கள் முன்னும் பின்னுமாக விழுந்தனர்.
  • விபத்து காரணமாக அவ்வழித்தடத்தில் சில மணி நேரம் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

ரோம்:

இத்தாலி நாட்டின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அங்குள்ள பென்சா-போர்லி பகுதிகளுக்கு இடையே சென்றபோது அதே தண்டவாளத்தில் மற்றொரு ரெயிலும் வந்து கொண்டிருந்தது.

இதனையறிந்த டிரைவர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்த முயன்றனர். எனினும் இரு ரெயிலும் நேருக்கு நேர் மோதியது. இதில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

அப்போது ரெயிலுக்குள் இருந்தவர்கள் முன்னும் பின்னுமாக விழுந்தனர். இதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக அவ்வழித்தடத்தில் சில மணி நேரம் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி மேட்டியோ சல்வினி தெரிவித்தார்.

Tags:    

Similar News