இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய தடை - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு
- வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
- கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது.
துபாய்:
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 13-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு செய்யவில்லை
இந்நிலையில் மே 13-ஆம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.