ஸ்பைடர்மேன் போன்று உலகின் 5வது உயரமான கட்டிடத்தில் ஏறிய பிரிட்டன் வாலிபர் கைது
- 73வது தளத்தை அடைந்தபோது அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர்.
- கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவர். 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென ஒரு வாலிபர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார். கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. போலீசாரும் தீயணைப்பு படையினரும் வந்து சேர்ந்தனர். அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விரிவான தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என ஒரு நாளிதழில் தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் லண்டனில் உள்ள ஷார்ட் என்ற கட்டிடத்தில் ஏறியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2018 ஆம் ஆண்டில், லோட்டே வேர்ல்ட் டவரில் ஏறிய பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் அலைன் ராபர்ட், பாதி தூரம் ஏறிய நிலையில், போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.