உலகம்

பயங்கரவாதத்தை இங்கிலாந்து எப்போதும் எதிர்க்கும்: இஸ்ரேலில் சுனக்

Published On 2023-10-19 10:51 GMT   |   Update On 2023-10-19 10:51 GMT
  • அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பை முடித்து புறப்பட்டார்
  • இன்றும் என்றும் உங்களுடன் இருக்கிறோம் என்றார் சுனக்

கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மிருகத்தனமாக கொன்று குவித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர்.

உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். அவர் பயணம் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரெலின் டெல் அவிவ் நகர் வந்திறங்கிய ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார். முன்னதாக இஸ்ரேல் அதிபரையும், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்தார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் ரிஷி சுனக், தெரிவித்திருப்பதாவது::

இன்றும் என்றும், நானும் இங்கிலாந்தும் உங்களுடன் இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு என்றும் நாங்கள் எதிராக இருக்கிறோம். தனது குழந்தைகள் தன் கண் முன்னாலேயே வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படுவது பயங்கரமான, தாங்க முடியாத துன்பம். தங்களின் உயிருக்கு உயிரானவர்களை பயங்கரவாதிகளிடம் பறி கொடுத்தவர்களை சந்தித்து பேசினேன். நாங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகளை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நான் அதிபர் ஐசக் ஹெர்சக்கை சந்தித்தேன். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின் போது இஸ்ரேலில் உள்ள இங்கிலாந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பிற்காக அவரிடம் நன்றி தெரிவித்தேன். காசாவில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News