உலகம்

ரஷியா இதை செய்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் - உக்ரைன்

Published On 2024-07-25 03:30 GMT   |   Update On 2024-07-25 03:30 GMT
  • ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.
  • ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என தெரிவித்தார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் துவங்கி, இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. போர் காரணமாக இருபதரப்புக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 29 மாதங்களாக தொடரும் போரில், ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.

போரில் ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி நேட்டோ அமைப்பு சார்பிலும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பட்தத்தில் உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ரஷியாவுக்கு எதிரான போர் குறித்து உக்ரைன் நாட்டின் உயரிய அதிகாரிகளில் ஒருவரான வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்த குலெபா உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் பட்சத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்று தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனின் உயரதிகாரி குலெபா ஆவார். சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த குலெபா ஏற்கனவே திட்டமிட்டதை விட அதிக நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் போது இரண்டு மிகமுக்கிய விஷயங்களை மட்டுமே முன்வைத்ததாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் குலெபா தெரிவித்தார்.

"நான் இரண்டு விஷயங்களை மட்டுமே முன்வைத்தேன். முதலில் உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்களை உக்ரைன் இல்லாமல் இயற்றக்கூடாது. இரண்டாவது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஏற்கப்பட்டால், நாங்கள் எத்தகைய விவாதங்கள் மற்றும் தீர்வுகளை காணவும் தயாராக இருக்கிறோம்," என்று குலெபா தெரிவித்தார்.

ரஷியா நல்ல உணர்வோடு வரும் பட்சத்தில் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறது. எனினும், ரஷியா தரப்பில் அத்தகை தயார்நிலை தற்போதைக்கு காணப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

Tags:    

Similar News