போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் - ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு
- 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார்.
- உக்ரைனில் உள்ள ரஷிய படைகள், தளவாடங்கள் மீது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மாஸ்கோ:
ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய படைகள், தளவாடங்கள் மீது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதே சமயம் தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள், ரஷியாவின் எதிர்தாக்குதல் அடக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.