இலங்கை சென்றடைந்தார் மத்திய இணை மந்திரி எல்.முருகன்: வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு
- யாழ்ப்பாணம் சென்றடைந்த எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர்.
- யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன் 4 நாள் பயணமாக இன்று இலங்கை புறப்பட்டு சென்றார். யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இலங்கை பயணத்தின்போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனை குறித்து பேசப்படும் என தெரிவித்தார்.
இலங்கை யாழ்ப்பாணம் சென்றடைந்த எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை எல்.முருகன் சந்தித்து பேசினார். யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தியா-இலங்கை நட்புறவின் இரண்டு முக்கிய தூண்களாக கருதப்படும் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக வட இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்துவதற்கும், பிராந்திய கடல்சார் மையமாக மாற்றுவதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா 2018 ஆம் ஆண்டில், 45.27 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கியது. அந்த துறைமுகத்தை எல்.முருகன் இன்று பார்வையிட்டார்.
இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை எல்.முருகன் சந்திக்க உள்ளார்.