உலகம்

டைட்டன் நீர்மூழ்கி விபத்து: 3 நாடுகள் உதவியுடன் விசாரிக்கிறது அமெரிக்க கடலோர காவல்படை

Published On 2023-06-26 10:04 GMT   |   Update On 2023-06-26 10:04 GMT
  • கடலுக்கடியில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • விசாரணையில், நீர்மூழ்கி கப்பலில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம்.

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த "ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் நிறுவனத்தின் "டைட்டன்" எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் "டைட்டானிக்" கப்பலை காண, 5 பேர் கொண்ட குழு சென்றது. ஆனால், வட அட்லாண்டிக் கடலின், கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில், சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.

நீண்ட தேடுதலுக்கும் பின்னர், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது என்று அதன் உயர் அதிகாரி ஜான் மௌகர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

இந்த பேரழிவு குறித்தும், கப்பலில் இருந்த 5 பேரின் இறப்புகள் குறித்தும் விசாரிக்க அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரப்பூர்வமாக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதற்கு கேப்டன் ஜேசன் நியூபாவர் தலைமை புலனாய்வாளராக இருக்கப் போகிறார். உலகளவில் கடல்சார் களத்தின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதே எனது முதன்மை குறிக்கோள். வெடிப்புக்கான காரணத்திற்கான ஆதாரங்களை சேகரிப்பதில் புலனாய்வாளர்கள் பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடலுக்கடியில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலைமைப் புலனாய்வாளர் கேப்டன் ஜேசன் நியூபாவர் கூறினார். எனினும், விசாரணைக்கான காலக்கெடுவை அவர் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரெஞ்சு கடல் விபத்து விசாரணை வாரியம் மற்றும் பிரிட்டன் கடல் விபத்து புலனாய்வு பிரிவு உட்பட பிற தேசிய மற்றும் சர்வதேச விசாரணை அதிகாரிகளுடன் அமெரிக்க புலனாய்வாளர்கள் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.

முன்னதாக, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், அட்லாண்டிக் பெருங்கடலில் "டைட்டன்" நீர்மூழ்கி வெடிவிபத்தில் உருக்குலைந்தது குறித்து அதிகாரிகளை கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறியது. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை, தானும் இதில் இணைந்து விசாரணையை வழி நடத்தும் என கூறியிருந்தது.

இந்த புலனாய்வில், நீர்மூழ்கி கப்பலில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News