இந்து, புத்த, சீக்கிய, ஜைன மதங்களுக்கான கூட்டமைப்பை நிறுவிய அமெரிக்க எம்.பி.
- அமெரிக்காவில் சுமார் 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்
- நான்கு மத மக்களுக்கு எழும் பிரச்சனை குறித்து குரலெழுப்ப முடியும் என்கிறார் ஸ்ரீதானேதர்
அமெரிக்க பாராளுமன்றத்திற்கு மிச்சிகன் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஸ்ரீதானேதர் (68). அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான இவர் ஒரு முன்னணி தொழிலதிபராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.
90களில் தொடங்கி அமெரிக்காவிற்கு மென்பொருள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களில் கல்வி பயிலவும் பணிகளுக்காகவும் இந்தியாவிலிருந்து பலர் சென்றுள்ளனர். அவ்வாறு செல்பவர்களில் 95 சதவீதம் பேர் அங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்களில் பல மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். சுமார் 45 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் (HBSJ) ஆகியோருக்காக ஒரு தனித்துவமான அரசியல் அமைப்பு ஒன்றை ஸ்ரீதானேதர் தொடங்குகிறார். இதற்கு இருபதிற்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்களின் ஆதரவும் உள்ளது.
நான்கு மதங்களின் மக்களுக்கிடையே பரஸ்பர புரிதலை வளர்க்கவும், இந்த மதங்களில் உள்ள மக்களின் தனித்துவ சிக்கல்கள் மற்றும் தேவைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பின் மூலம் 4 மதங்களை சேர்ந்தவர்களுக்கான உரிமைகளை பெறவும், மத ரீதியில் அவர்கள் பாகுபாடு செய்யப்பட்டால் அதனை எதிர்க்கவும், இந்த மதங்களை குறித்த தவறான புரிதல்களை நீக்கவும் முடியும் என ஸ்ரீதானேதர் கருதுகிறார்.
அனைவரையும் ஒன்றிணைத்து வாழும் அமெரிக்கா பலமான அமெரிக்காவாக திகழும் என ஸ்ரீதானேதர் தெரிவித்துள்ளார்.