ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: மகிழ்ச்சியில் லூசியானா தம்பதி
- இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே 3-வயது மகள் உள்ளார்
- இதற்கு சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்று அல்லது 20 கோடியில் ஒன்று
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் வசித்து வருபவர்கள் ஹேலி கோர்டாரோ மற்றும் மேத்யூ கோர்டாரோ தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3-வயது மகள் உள்ளார்.
மீண்டும் கர்ப்பமடைந்திருந்த ஹேலி அம்மாநிலத்தின் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் உள்ள தெற்கு வில்லிஸ்-நைட்டன் பெண்கள் உடல்நல மையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
ஹேலி கர்ப்பமுற்று 31 வாரங்கள் கடந்திருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் பிரசவம் நடைபெற்றது. அவருக்கு ஒரே நேரத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதில் கோர்டாரோ தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குழந்தைகளை அந்த மருத்துவமனையின் டாக்டர். ஜெரால்டு பிரென்ட் விட்டன் கண்காணித்து வருகிறார்.
இது போன்ற கருத்தரிப்புகள் "தன்னிச்சையான கருத்தரிப்பு" (spontaneous triplets) என மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிறது. இத்தகைய கருத்தரித்தல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்றாகவோ அல்லது 20 கோடியில் ஒன்றாகவோதான் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
க்ளேர், எல்லா மற்றும் லில்லி என பெயரிடப்பட்டுள்ள அந்த 3 பெண் குழந்தைகளும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.