ரஷியாவை திணற வைக்கும் வகையில் நிறுவனங்கள், தனிநபர் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
- ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் நிறுவனங்கள் மீது தடை
- ஏற்றுமதியாளர்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நாளில் இருந்து அமெரிக்கா பல்வேறு தடையை ரஷியா மீது அமல்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மேலும், உக்ரைன் பதிலடி கொடுக்க பில்லியன் கணக்கில் ராணுவ உதவிகளும் செய்து வருகிறது. இருந்தாலும் ரஷியா போரை நிறுத்துவதுபோல் தெரியவில்லை. வருவாய், ராணுவ உதவிகள் எங்கிருந்து வருகிறதோ, அந்த இடத்தையெல்லாம் முடக்கி, ரஷியாவிற்கு மூச்சுச் திணறலை கொடுக்க அமெரிக்கா முயற்சி செய்துள்ளது.
அந்த வகையில் ரஷியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் வரை பல்வேறு நாடுகளில் உள்ள 120 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.
ரஷிய சுரங்கம், தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்துள்ளது. கிர்கிஸ்தானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நபர்கள் மீதும் இந்த பொருளாதார தடை பாய்ந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்ட பொறியியல் கம்பெனி ரஷியாவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது. இந்த நிறுவனத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஜப்பானில் அமெரிக்கா மற்றும் ஏழு நடுகள் இடையிலான மாநாடு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியா பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது முழு அளவில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு பொருளாதார அளவில் நெருக்கடி கொடுப்பதற்கும், சட்டவிரோத போரை ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் துணை நிற்போம்'' என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.