உலகம்

வெறும் 3.13 வினாடிகள்தான்.. ரூபிக் கியூப் விளையாட்டில் அமெரிக்க வாலிபர் உலக சாதனை

Published On 2023-06-15 15:27 GMT   |   Update On 2023-06-15 15:27 GMT
  • சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே முந்தைய சாதனையாக இருந்தது.
  • கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் மேக்ஸ் வசமே உள்ளது.

ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்துவதே இந்த ரூபிக் கியூப் விளையாட்டு. மாறி மாறி உள்ள கனசதுர கட்டங்களை வேகமாக ஒழுங்குபடுத்துவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்து வயதினரும் சாதனைகளை படைத்துவருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 3x3x3 ரூபிக்ஸ் கியூப் புதிருக்கு மிக வேகமாக தீர்வு கண்டு, "ஸ்பீட்கியூபிங் லெஜண்ட்" என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் (வயது 21) உலக சாதனை புரிந்தார்.

இந்த வகை ரூபிக்ஸ் கியூபை சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு என்பவர் கடந்த 2018ம் ஆண்டில் 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே உலக சாதனையாக இருந்தது. மேக்ஸ் 3.63 வினாடிகளில் தீர்வு கண்டு இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மேக்ஸ் 3.13 வினாடிகளில் புதிருக்கு தீர்வு கண்டு முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

அவர் உலக சாதனையை முறியடித்த நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அதில் அவரது சக கியூப் தோழர்கள் அவரை உற்சாகப்படுத்துவதைக் காணலாம்.

ஸ்பீட்கியூபிங் போட்டிகளில் மேக்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் அவர் வசமே உள்ளது எனலாம்.

கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலின்படி 4x4x4 கியூப், 5x5x5 கியூப், 6x6x6 கியூப் மற்றும் 7x7x7 கியூப்  ஆகியவற்றிற்கான ஒற்றை-தீர்வு மற்றும் சராசரி-தீர்வு உலக சாதனைகளை மேக்ஸ் படைத்திருக்கிறார்.

3x3x3 கியூப் புதிருக்கான சராசரி சாதனையை போலந்து நாட்டின் டைமன் கோலாசின்ஸ்கியுடன் இணைந்து தக்க வைத்திருந்தார். இதற்கு இவர் எடுத்து கொண்ட நேரம் 4.86 வினாடிகள். இந்த சாதனையை 4.69 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் யிஹெங் வாங் 2023 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி முறியடித்தார்.

ஆட்டிஸம் எனப்படும் ஒரு விதமான் மன இறுக்க நோயால் பாதிக்கபட்ட மேக்ஸிற்கு, இந்த ஸ்பீட்கியூபிங் ஒரு நல்ல சிகிச்சை  என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். "ஒரு காலத்தில் மேக்ஸால் தண்ணீர் பாட்டில்களை கூட திறக்க முடியவில்லை. ஆனால் அவர் ரூபிக்ஸ் கியூப்களை தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார்," என்றும் அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News