அமெரிக்க பாராளுமன்றத்தில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்
- அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
- அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடும் சட்டம் இயற்றவேண்டும் என பாராளுமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதையடுத்து, துப்பாக்கி வினியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அதிபர் ஜோ பைடனும் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என பாராளுமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில் 65 ஓட்டுகளுடன் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
தொடர்ந்து இந்த மசோதா பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பின்னர் அது அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் அந்த மசோதாவில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக அமலுக்கு வரும்.
21 வயதுக்கு உட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது, மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.