உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு 3 மடங்கு பிரசார நன்கொடை

Published On 2024-09-07 05:12 GMT   |   Update On 2024-09-07 05:12 GMT
  • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.
  • நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது.

இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் கமலா ஹாரிசின் பிரசார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது. கமலா ஹாரிசுக்கு 361 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி குவிந்துள்ளது.

டிரம்புக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கிடைத்துள்ளது. கமலா ஹாரிசுக்கு கிடைத்த தொகை, இந்த அமெரிக்க தேர்தலில் ஒரு மாதத்தில் ஒரு கட்சிக்கு கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.

தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் கடந்த ஜூலை 21-ந்தேதி அறிவித்தார்.

அதன்பின் கமலா ஹாரிஸ் தேர்தல் களத்தில் குதித்தார். அன்றில் இருந்து கமலா ஹாரிசின் பிரசார குழு 615 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் பிரசார மேலாளர் ஜூலி சாவேஸ் ரோட்ரிக்ஸ் கூறும்போது, குறுகிய காலத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளார். இது தேர்தலில் நெருங்கிய வெற்றி தரும் என்றார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிதி ஆதாயம் ஹாரிசுக்கு சாதகமாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.



இதற்கிடையே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி டிரம்புக்கு தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, அதிபர் தேர்தல் முடியும் வரை, டிரம்ப் மீதான தண்டனை அறிவிப்பதை ஒத்தி வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News