அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை: கமலா ஹாரிஸ் உறுதி
- புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார்.
- அங்கு காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதனால் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் புளோரிடாவில் உள்ள அவரது சொத்துக்களுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் குறித்து எனக்கு விளக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.