இலங்கைக்கு புதிய கடன் கிடையாது... கைவிரித்தது உலக வங்கி
- நிதி நெருக்கடிக்கு அரசு தீர்வு காணத் தவறியதையடுத்து இலங்கையில் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது
- அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பிச் சென்றதையடுத்து, புதிய அதிபராக ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவா:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக்கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் கடன்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு நிதி உதவி அளிக்க உலக வங்கி மறுத்துளது. இது குறித்து உலக வங்கி கூறுகையில், நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டம், பொருளாதார கட்டமைப்பை வகுக்கும் வரையில், இலங்கைக்கு உதவப்போவதில்லை, புதிய நிதி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது. அதேசமயம், இலங்கையில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு, நிதி நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறியதையடுத்து இலங்கையில் பல மாதங்களாக மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரமடைந்து புரட்சியாக வலுப்பெற்ற நிலையில், அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.