உலகம்

சாதனையாளர் கிப்டம், சாலை விபத்தில் உயிரிழந்தார்

Published On 2024-02-12 14:18 GMT   |   Update On 2024-02-12 14:18 GMT
  • 3 முன்னணி மராத்தான் பந்தயங்களில் பட்டம் வென்றவர் கிப்டம்
  • சிகாகோ மராத்தானில் 02:00:35 மணிக்குள் ஓடி சாதனை படைத்தார் கிப்டம்

"லாங் டிஸ்டன்ஸ் ரன்னிங்" எனப்படும் நீண்ட தூர ஓட்ட பந்தயங்கள் (3 கிலோமீட்டர்) மற்றும் மராத்தான் (42 கிலோமீட்டர்) பந்தயங்களில் உலகின் முன்னணி வீரர், கென்யாவை சேர்ந்த கெல்வின் கிப்டம் செருயோ (Kelvin Kiptum Cheruiyot).

உலகின் முன்னணியான 3 மராத்தான் பந்தயங்களில் முதலிடம் பிடித்தவர் கிப்டம்.

கடந்த 2023 அக்டோபர் மாதம், உலக ஓட்ட பந்தய வரலாற்றிலேயே 02 மணி நேரம் 01 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சிகாகோ மராத்தான் போட்டியை வென்று சாதனை புரிந்தார் கிப்டம்.

நேற்று இரவு, மேற்கு கென்யாவின் எல்டொரெட் பகுதியில் தனது டொயோட்டா ப்ரீமியோ காரில், பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஹகிசிமானா (Gervais Hakizimana) மற்றும் வேறொரு நபருடன் கிப்டம் பயணித்தார்.

காரை கிப்டம் ஓட்டினார்.

ரிஃப்ட் வேலி எனும் டவுனுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து தாறுமாறாக ஓடி, 200 அடி தொலைவில் இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கி, ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

உடன் பயணித்த மற்றொரு பயணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளம் வயதிலேயே பல உலக சாதனைகளை புரிந்து, மேலும் பல உச்சங்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிப்டம், 24 வயதில் உயிரிழந்ததற்கு உலக அளவில் தட-கள (track and field) பந்தயங்களை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News