அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது
- அமெரிக்காவில் ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது.
- தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை ஆகும்.
38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்து ஆய்வு மையம், எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.