செய்திகள் (Tamil News)

நடுவர்கள் குறித்த விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கட்டும்: வர்ணனையாளர்களுக்கு ஐசிசி வேண்டுகோள்

Published On 2019-06-08 11:00 GMT   |   Update On 2019-06-08 11:00 GMT
நடுவர்கள் முடிவு குறித்து விமர்சனங்கள் செய்யும்போது நியாயமானதாக இருக்கட்டும் என்று வர்ணனையாளர்களுக்கு ஐசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பொதுவாக மிகப்பெரிய தொடர் நடைபெறும்போது நடுவர்கள் செய்யும் தவறுகள் மிகப்பெரியதாக பேசப்படும். அதேபோல்தான் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டியின்போது நடுவர்களின் செயல்பாடு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கெய்ல் பேட்டிங் செய்யும்போது ஸ்டார்க் வீசியது நோ-பால் என்று தெளிவாக தெரிந்த பின்பும் நடுவர் நோ-பால் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தில் கெய்ல் எல்பிடபிள்யூ ஆனார். ஒருவேளை நோ-பால் கொடுத்திருந்தால் கெய்ல் ஆட்டமிழந்திருக்கமாட்டார் என்ற விவாதம் எழும்பியது.

மேலும், ஆஸ்திரேலியா அப்பீல் கேட்டதற்கு சாதகமான வகையில் நடுவர்கள் நடந்து கொண்டதாக சர்ச்சை எழும்பியது. பிராத்வைட் மற்றும் ஜேசன் ஹோல்டர் வெளிப்படையாக விமர்சனம் வைத்தனர்.



உலகக்கோப்பையில் வர்ணனையாளராக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங், ‘‘நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால், இந்த போட்டியில் நடுவர்களின் முடிவுகள் கொடூரமாக இருந்தன’’ என்றார்.

இந்நிலையில் வர்ணனையாளர்கள் மிகவும் கடினமான பணியைச் செய்யும் நடுவர்கள் குறித்து பாராட்டவில்லை என்றாலும், விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கட்டும் என்று ஐசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News