இந்தியா (National)

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ரூ.100 அனுப்பிய பழங்குடியின பெண்

Published On 2024-10-20 06:52 GMT   |   Update On 2024-10-20 06:52 GMT
  • பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
  • பாராட்டு தெரிவிக்கும் வகையில் பணத்தை வழங்கியதாக கூறினார்.

புதுடெல்லி:

ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 147 இடங்களில் பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றியது.

இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு மோகன் சரண்மாஜி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் சுந்தர்கர் மாவட்டத்தில் பா.ஜ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பைஜயந்த் ஜெய்பாண்டா கலந்து கொண்டார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், பைஜயந்த் ஜெய்பாண்டாவிடம் 100 ரூபாய் கொடுத்து பிரதமர் மோடிக்கு அனுப்புமாறு கூறியதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்தார்.

அவரிடம் பைஜயந்த் ஜெய்பாண்டா பிரதமருக்கு நன்றி தெரிவித்தால் போதும், பணம் அவசியம் இல்லை என வலியுறுத்திய போதும், அந்த பெண் தனது நன்றியை தெரிவிக்க இந்த பணத்தை பிரதமருக்கு அனுப்புமாறு கூறினார்.

மேலும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அந்த பணத்தை வழங்கியதாக அவர் கூறினார்.

இது தொடர்பான புகைப்படத்தை பைஜயந்த் ஜெய்பாண்டா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதோடு அந்த பெண்ணின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள நல்ல மாற்றங்களுக்கும், நம்பிக்கைக்கும் இந்த சைகை ஒரு சான்றாகும் என்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், எப்போதும் என்னை ஆசீர்வதிக்கும் எங்கள் நாரி சக்திக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதங்கள் என்னை விக்சித் பாரதத்தை உருவாக்க உழைக்க தூண்டுகின்றன என்று பதில் அளித்துள்ளார்.

Tags:    

Similar News