இந்தியா (National)

காஷ்மீர் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடியை சந்திக்கிறார் உமர் அப்துல்லா

Published On 2024-10-20 06:27 GMT   |   Update On 2024-10-20 06:27 GMT
  • காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டம் நவம்பர் 4-ந் தேதி தொடங்கும்.
  • லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்ட சபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவி ஏற்றார்.


அவரது தலைமையில் நடந்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இதையடுத்து இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக மாற்றப்படலாம்.

இதற்கிடையே உமர் அப்துல்லா விரைவில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை வைக்கிறார். தற்போதைய சூழலில் மத்திய அரசு மீண்டும் ஜம்மு காஷ்மீரை மாநிலமாக்க ஒப்புதல் அளிக்காது என்றே கூறப்படுகிறது.

காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டம் நவம்பர் 4-ந் தேதி தொடங்கும்.

Tags:    

Similar News