செய்திகள் (Tamil News)

நான் வீட்டிற்கு செல்ல வேண்டுமா?: ஐசிசி மீது மைக்கேல் ஹோல்டிங் கடும் சாடல்

Published On 2019-06-12 11:50 GMT   |   Update On 2019-06-12 11:50 GMT
வர்ணனையின்போது நடுவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டாம் என்று ஐசிசி கேட்டுக்கொண்டதற்கு, ஹோல்டிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது நடுவர்கள் ஏராளமான தவறுகள் செய்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

நடுவர்கள் முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் மற்றும் பிராத் வைட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங் ‘நடுவர்களின் முடிவு கொடூரமானது’ என்று தெரிவித்திருந்தார்.

இதனால் ஐசிசி வர்ணனையாளர்கள் லைவ் போட்டியின்போது நடுவர்கள் குறித்து விமர்சனம் செய்யும்போது கவனமாக பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங்கிற்கு இ-மெயில் அனுப்பியது.

இதனால் கடுங்கோபம் அடைந்த அவர், கால்பந்து போட்டியாக இருந்திருந்தால் நடுவர் வீட்டுக்கு போய் இருப்பார். கிரிக்கெட்டில் நான் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? என்று காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டியில் நடுவர்கள் செய்த தவறுகளை பிபா அம்பயர்கள் செய்திருந்தால், அவர்கள் வீட்டிற்கு சென்றிருப்பார்க்ள. அவர்கள் இன்னொரு உலகக்கோப்பைக்கான போட்டியில் நடுவராக செயல்பட முடியாது. ஒரு கிரிக்கெட்டராக, கிரிக்கெட் உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடுவர்கள் தவறுகள் செய்தாலும், அவர்களை பாதுகாக்க வேண்டும் நோக்கம் உள்ளதா?.

ஐசிசி கூறிய வேண்டுகோளில் எனக்கு உடன்பாடில்லை. இதனால் நான் அடுத்த போட்டிக்கு செல்வதற்குப் பதிலாக சொந்த நாடு திரும்ப வேண்டுமா? என்பதை தெரியப்படுத்துங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Similar News