இந்தியா

ஆப்பிரிக்க நாடுகள் பயணம் நிறைவு: அதிகாலையில் டெல்லி திரும்பினார் ஜனாதிபதி முர்மு

Published On 2024-10-19 22:59 GMT   |   Update On 2024-10-19 22:59 GMT
  • கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு.
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்றார்.

புதுடெல்லி:

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் முதல் பகுதியாக கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றார்.

இதையடுத்து, தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக மொரிடேனியா நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அவரை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார். தலைநகர் நாக்சாட்டில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.

தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக்கேல் யூசி நேரில் சென்று வரவேற்றார். அதன்பின் மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை சந்தித்து திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி, சுகாதார ஒத்துழைப்பின் அடையாளமாக புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் ஆகியவற்றை திரவுபதி முர்மு வழங்கினார்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

Tags:    

Similar News