புதுச்சேரி

கைது செய்யப்பட்ட அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார்.

ஜார்க்கண்டில் இருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் வடமாநில கும்பல்- சென்னையில் கைதான 2 பேர் பரபரப்பு

Published On 2023-05-12 05:57 GMT   |   Update On 2023-05-12 05:57 GMT
  • புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
  • ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

புதுச்சேரி:

புதுவை துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). ஜிப்மர் காவலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால் பொருள் அவருக்கு கிடைக்கவில்லை.

இதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடினார். அப்போது குறிப்பிட்ட செல்போன் எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மாவின் விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிவிடும்படி கூறியுள்ளார்.

அதன்படி கிருஷ்ணசர்மா பதிவு செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 ¾ லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ண சர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிந்தது.

இதையடுத்து புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 ஏ.டி.எம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது வங்கி கணக்கை தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ஒரு நபரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுவினர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளை வாங்கி கொள்கின்றனர்.

'ஆன்லைன்' மூலம் திருடப்படும் பணத்தை தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கமிஷனாக கொடுத்து விட்டு, மீதி தொகையை மோசடி கும்பல் பெற்றுக் கொள்கிறது.

இதனால், மோசடி கும்பலை கைது செய்ய புதுவை சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News