புதுச்சேரி

போதை ஆசாமி, டாக்டரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு

Published On 2024-04-16 08:51 GMT   |   Update On 2024-04-16 08:51 GMT
  • காயமடைந்த டாக்டர் நவீனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
  • டாக்டர்களின் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரி பாவாணர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40). இவரது மகன் மகேஷ் (17) கடந்த 12-ந் தேதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மகேஷ் படுகாயம் அடைந்தான். இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் வினோத்குமார் நேற்று இரவு தனது மகனை பார்ப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு குடிபோதையில் வந்தார். இதனை தட்டிக்கேட்ட அவரது மனைவியையும், சகோதரியையும் அவர் தாக்கினார். அப்போது அங்கு இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

போதையில் வெளியே இருந்த வினோத்குமார், ஆத்திரத்தில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு நின்றார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த டாக்டர் நவீன் (28) என்பவரின் கழுத்தில் திடீரென வெட்டினார்.

இதில் நவீன் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த நோயாளிகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காயமடைந்த டாக்டர் நவீனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் டாக்டரை கத்தியால் வெட்டிய வினோத்குமாரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பெரிய கடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். டாக்டர் வெட்டப்பட்டதை அறிந்த மற்ற டாக்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், அரசு ஆஸ்பத்திரியில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரியபாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பணியை புறக்கணித்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதியடைந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த வைத்திலிங்கம் எம்.பி. சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு, பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தை கை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். டாக்டர்களின் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News