search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    2024 ஆவணி மாத ராசிபலன்

    அமைதியாக இருந்து அரிதானதைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்துசேரும். 6-ல் உள்ள சனி வக்ரம் பெறுவதால், உத்தியோகம் மற்றும் தொழிலில் உன்னத நிலை உருவாகும்.

    குருவின் பார்வை ராசியில் பதிவதால் வியாழ நோக்கம் ஏற்பட்டு, கல்யாணக் கனவுகள் நனவாகும். என்ன இருந்தாலும் ஜென்மத்தில் கேது இருப்பதால் இடையிடையே மன அமைதி குறைவும், இனம் புரியாத கவலைகளும் மேலோங்கும்.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. விரயாதிபதி சூரியன் பலம் பெற்று பார்ப்பதால், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இட மாற்றம் பற்றிய சிந்தனை அலைமோதும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மன சஞ்சலத்தை உருவாக்கலாம்.

    சூரியனுக்கும், சனிக்கும் உரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில் கொஞ்சம் பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந்தேதி கன்னி ராசிக்கு செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். அரசியல் களத்தில் உள்ளவர்கள், அதிரடியான திருப்பங்களைச் சந்திப்பர்.

    பெற்றோர் வழியிலும், மற்றோர் வழியிலும் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பத்தில் மூன்றாம் நபரால் குழப்பங்கள் ஏற்படும். எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். சக பணியாளர்களை நம்பி செயல்பட இயலாது. இந்த காலகட்டத்தில் பொறுமை மிக அவசியம்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் பொழுது தொழிலில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளை நம்பி ஏமாறும் சூழ்நிலையும் உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் மீது பழி சுமத்தலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    தொழிலில் பணியாளர்களால் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இடம், பூமி வாங்கியதில் வில்லங்கள் ஏற்பட்டு மனக்கவலையை அதிகரிக்கச் செய்யும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நேரம் இது.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்கும் புதன், கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் ஆவார். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், நல்ல நேரம்தான். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் மாற்றம் ஏற்படும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு அரிய யோசனைகளை வழங்குவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கிய தொல்லை அகலும். எப்போதும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் குவியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவ - மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண்களுக்கு குடும்ப சுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 27, 28, 31, செப்டம்பர்: 1, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    ×