search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் கன்னி ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியில் இருக்கிறார். எனவே இந்த மாதம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

    வீடு மாற்றமும், இடமாற்றமும் எதிர்பாராத விதத்தில் அமையும். இல்லத்தில் சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. தொழிலை பொறுத்தவரை குறுக்கீடுகள் வரலாம். எனவே தசா புத்திக்கேற்ற தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபடுவது நன்மை தரும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறும் பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உருவாகும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    வேலைப்பளு கூடும். 'உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. பொறுமையும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், உச்சம் பெறுவது நன்மைதான். தொழில் வெற்றி நடைபோடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும்.

    அழியாத புகழுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும் விதத்தில், நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். உத்தியோகத்தை பொறுத்தவரை, உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். அலுவலகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது வருமானம் உயரும். வளர்ச்சி கூடும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும்.

    'இல்லம் கட்டிக் குடியேற வேண்டும்' என்ற ஆசை நிறைவேறும். பெற்றோரின் ஆதரவோடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், 'சுய தொழில் செய்யலாமா?' என்று சிந்தனை செய்வார்கள்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பலமுறை முயற்சித்தும் முடியாத காரியங்கள், இப்போது முடிவுக்கு வரும். இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு யோகம் இப்போது கைகூடும்.

    பிள்ளைகளின் திருமணப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும். வியாபார விரோதங்கள் விலகும். புதிய கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவை நடைபெற வழிபிறக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் விலகும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்கள் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 22, 23, 27, 28, அக்டோபர்: 4, 5, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    ×