search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமின் கோரி மனு
    X

    திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமின் கோரி மனு

    • நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் சம்மனை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போதுதான் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் கிடைக்குமா என்பது தெரிய வரும்.

    திரிஷா பற்றிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள மன்சூர் அலிகான் தான் பேசியதில் தவறு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

    நடிகர் சங்கத்துக்கு எதிராகவும் அவர் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். டைரக்டர் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இருந்த நிலையிலும் மன்சூர் அலிகான் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில்தான் அவர் முன்ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடியுள்ளார். இதனால் போலீசாரால் மன்சூர் அலிகானிடம் இன்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×