search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    mari selvaraj vaazhai
    X

    வாழை படத்தின் கதை சர்ச்சை... சோ. தர்மன் சிறுகதையை பகிர்ந்த மாரி செல்வராஜ்

    • வாழை படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.
    • சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.

    என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......" என்கிற சிறுகதை.

    என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

    வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

    ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.

    கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு.

    "வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்."

    என்னை வாழை வாழ வைக்கவில்லை" என்று பதவியிட்டுள்ளார்.

    1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×