search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மெய்யழகன்
    X

    மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு - இயக்குநர் பிரேம் குமார் அறிக்கை

    • மெய்யழகன் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
    • மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில்தான் இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.

    படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.

    எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×