search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாமன்னன் பட வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
    X

    'மாமன்னன்' பட வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

    • மாமன்னன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இதனிடையே மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், தாக்கல் செய்த மனுவில், "மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. தற்போது வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.



    இப்படம் வெளிவந்தால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.



    இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள், திரைப்படம் மக்கள் பார்க்கவே - இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×