search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்.டி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த்
    X

    என்.டி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த்

    • என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெற்று வருகிறது.
    • இந்த விழாவில் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வந்தார்.



    300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




    சில தினங்களுக்கு முன்பு என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பதாக பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெற்றது.




    இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு மற்றும் நடிகரும் என்.டி.ராமாராவின் மகனுமாகிய பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×